Powered By Blogger

Oct 14, 2015

எல்ஐசி... லாபகரமான முதலீட்டு ஃபார்முலா

வாரன் பஃபெட் வழியில் எல்ஐசி... லாபகரமான முதலீட்டு ஃபார்முலா!

இந்தியப் பங்குச் சந்தையில் பல்வேறு முதலீட்டாளர்கள் இருந்தாலும், சந்தையின் போக்கை தீர்மானிப்பது ஆற்றலும் சக்தியும் படைத்த பெரு முதலீட்டாளர்களான அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்ஐஐ) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள்தான்.

கடந்த காலங்களில் சந்தையின் போக்கை ஆராயும்போது இவர் களின் முதலீட்டு நிலையைப் பொறுத்தே சந்தையின் போக்கு அமைந்ததைப் பார்த்திருக்கலாம்.அதிலும் குறிப்பாக, எல்ஐசி என வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான், இந்தியப் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் இந்திய நிறுவனம். எல்ஐசி பங்குச் சந்தையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள்.

1. சென்ற நிதியாண்டில் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட ரூபாய் 55,000 கோடி என்ற அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தது.

2. 2015 மார்ச் நிலவரப்படி, எல்ஐசி நிறுவனத்தின் மொத்த முதலீடு இந்தியப் பங்குச் சந்தை யில் ரூபாய் 4.14 லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது. இதே கால கட்டத்தில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஈக்விட்டி ஃபண்டுகளின் முதலீடு ரூ.3 லட்சம் கோடியாகத்தான் உள்ளது. இவற்றிலிருந்தே இந்தியப் பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய ஒரு சக்தி எல்ஐசி என்பதை உணரலாம்.

எல்ஐசியின் முதலீட்டு மூலதனம்!

எல்ஐசி என்பது கடந்த 1956-ல் துவங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் பல கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது.

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பிரீமிய தொகையை வரை யறுக்கப்பட்ட முதலீடுகளில், முதலீடு செய்வது எல்ஐசியின் நோக்கம்.

முதலீட்டுத் தொகையின் பெரும்பாலான பணத்தை, கடன் பத்திரம் சார்ந்த முதலீடுகளிலும்; ஒருபகுதியை பங்குச் சந்தையிலும் முதலீடு செய்வதுதான் எல்ஐசி நிறுவனத்தின் பொதுவான முதலீட்டுக் கொள்கை.

உதாரணத்துக்கு, சென்ற நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த முதலீடு ஏறக்குறைய ரூபாய் 3 லட்சம் கோடியாக இருந்தது. அதில் பங்குச் சந்தை முதலீடு என்பது ஏறக்குறைய 20 சதவிகிதமாக இருந்தது. ரூபாய் மதிப்பில் சராசரியாக ரூபாய் 60,000 கோடி என்ற அளவில் பங்குச் சந்தை முதலீடு என்பது இருந்தது.

இந்தத் தொகை வருடா வருடம் மாறும் தன்மை கொண்டது. ஏனென்றால், முதலீடு என்பது அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் பிரீமிய தொகையை வைத்துதான்.

பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலா னோர் எல்ஐசி குறித்த செய்தி அடிக்கடி பத்திரிகைகளில் வருவதைப் பார்த்திருப்பார்கள்.

ஒரு பொதுத்துறை நிறுவனம், தன்னிடம் உள்ள பல்லாயிரக் கணக்கான கோடி முதலீட்டை அதிக ஏற்ற, இறக்கம் உள்ள பங்குச் சந்தையில் சர்வசாதாரணமாக முதலீடு செய்து அதிக லாபம் எப்படி ஈட்டுகிறது என்பதுதானே உங்கள் கேள்வி.

வாரன் பஃபெட் வழியில்..!

உலக அளவில் மிகப் பெரிய முதலீட்டு குருவாக இருப்பவர் வாரன் பஃபெட். ஒற்றை மனிதனாக இருந்துகொண்டு, காலத்தைத் தாண்டி நிற்கும் சில கொள்கைகளை தொடக்கம் முதலே தொடர்ந்து பின்பற்றி வந்ததன் விளைவாகத்தான், இன்று உலக அளவில் மிகப் பெரும் பணக்காரராக இருக்கிறார்.

உலக அளவில் வாரன் பஃபெட் இருப்பதுபோல, இந்திய அளவில் எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. வாரன் பஃபெட் காட்டிய அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் எல்ஐசி நிறுவனம் தனது முதலீட்டு அணுகுமுறையை அமைத்துக் கொண்டுள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை வாரன் பஃபெட்டிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதுபோல, முதலீட்டு உலகின் வெற்றிச் சூத்திரங்களை எல்ஐசி நிறுவனத் திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.

இன்றைக்கு பல லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு அணுகுமுறைகள் என்னென்ன என்று ஆராய்ந்து பார்த்தால், பல முதலீட்டுப் பாடங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

பாதுகாப்பு!

எல்ஐசியின் முதலீட்டு முறையைப் பார்க்கும்போது, அந்த நிறுவனத்தின் கவனம், மூலதனப் பாதுகாப்பில் அதிகம் இருக்கும். எல்ஐசி நிறுவனம் செய்யும் முதலீடு என்பது வாடிக்கையாளர்கள் செலுத்தும் பிரீமியம் தொகையே. ஆகையால், அவற்றை முதலீடு செய்யும்போது அதிகக் கவனத்துடன் ஈடுபடுகிறது.

முதலீடுகளிலிருந்து பெறப் படும் வருமானம் ஆயுள் காப்பீட்டுத் திட்ட சந்தாதாரர் களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஆகையால், எல்ஐசியின் பங்குச் சந்தை முதலீடுகள் பெரும்பாலும் அடிப்படையில் வலுவான நிறுவனப் பங்குகளில்தான் செய்யப்படுகிறது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால், ரிஸ்க் குறைந்து வருமானம் பெருகும்; மூலதனமும் பாதுகாப்பாக இருக்கும் என்பது எல்ஐசி  நமக்குக்  கற்றுக்கொடுக்கும் பாடம்.

சீரான வருமானம்!

எல்ஐசியின் முக்கிய முதலீட்டு வழிமுறைகளில் ஒன்று, பங்குச் சந்தையில் சீரான வருமானம் ஈட்டுவதேயாகும். பல கோடி சந்தாதாரர்களுக்குச் சீரான வருமானம் வழங்கியாக வேண்டும். அப்படி சீரான வருமானம் வழங்குவதற்கு ஏற்ப எல்ஐசி முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, தொடர்ந்து அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனப் பங்குகளில் அதிக முதலீட்டை எல்ஐசி மேற்கொண்டு வருவதை அதன் கடந்த கால முதலீட்டு வரலாற்றைப் பார்த்தால் விளங்கும். உதாரணத்துக்கு, இதன் முதலீடுகள் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகம் இருப்பதைக் காணலாம்.

மேலும், எல்ஐசி முதலீட்டுக்காகத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் ப்ளூசிப், லார்ஜ் கேப் பங்குகள் தான்; அதிலும் குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களே. அதனால் ஏற்ற இறக்கத்தில் முதலீடு செய்தாலும் வருமானம் சீராக இருந்து வரும்.

முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து நமது பணத்தை யும் தூக்கத்தையும் விரயம் செய்வதைக் காட்டிலும் நல்ல தரமான, டிவிடெண்ட் வழங்கும், வருமானம் பெருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால், எந்தச் சந்தை நிலையிலும் வெற்றி பெற்று நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதற்கு எல்ஐசி ஒரு நல்ல உதாரணம்.

பரந்துபட்ட முதலீடு!

பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி பெற ஓர் அடிப்படை விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் டைவர்ஸிஃபிகேஷன் என வழங்கப்படும், முதலீட்டை பிரித்துப் பல நிறுவனப் பங்கு களில் முதலீடு செய்யும் வழிமுறை. வாரன் பஃபெட் சொன்ன முக்கியமான பாடங் களில் இதுவும் ஒன்று.

நிறுவனங்களின் பங்கில் ஒரு சதவிகிதத்துக்கும் மேலாக எல்ஐசி முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 315. அதிலும் குறிப்பாக, வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்களில் அதிக முதலீடு செய்திருக்கிறது.

எல்ஐசி 300-க்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதித்துறை பங்குகளேயாகும். அதிலும் குறிப்பாக, சமீபத்திய தகவல்படி, எல்ஐசி 33 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி களில் முதலீடு செய்துள்ளது.

துறைவாரியாக எல்ஐசியின் முதலீடுகளைப் பார்க்கும்போது, வங்கி மற்றும் நிதித்துறை, எண்ணெய் நிறுவனங்கள், கட்டுமானம், ரியல் எஸ்டேட், சிமென்ட், இன்ஃப்ரா, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய முக்கியத் துறைகளில் பிரித்து முதலீடு செய்யப்பட் டுள்ளது. இது எப்படிச் சிறந்ததொரு யுக்தி என்பதைப் பார்ப்போம். ஒருவர் தனது முதலீட்டை ஒரே நிறுவனத்தில் செய்கிறார். மற்றொருவர் தனது முதலீட்டை பத்து நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்கிறார்.

முதலாமவர், முதலீடு செய்த அந்த நிறுவனம் சரியான வருமானம் ஈட்டாமலோ அல்லது    நஷ்டம் ஏற்படுத்தி னாலோ அவருக்குத் தோல்வி தான். இரண்டாமவர் வாங்கிய பத்து நிறுவனப் பங்குகளில் இரண்டு நஷ்டம் என்றாலும் மீதமுள்ள 8 நிறுவனப் பங்குகள் நல்ல வருமானம் கொடுத்திருக்கும்.

பல்வேறு துறைகளில் பல்வேறு நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யும் யுக்தி தான் எல்ஐசியின் முதலீட்டு வெற்றிக்கு முக்கியமான காரணம்.

தொலைநோக்குப் பார்வை!

பங்குச் சந்தை முதலீட்டில் எல்ஐசியின் முக்கியமான வழிமுறை ஒன்று உள்ளது. அதுதான் தொலைநோக்குப் பார்வை அல்லது நீண்டகாலப் பார்வை. வாரன் பஃபெட் பல ஆண்டுகளுக்குமுன் வாங்கிய பங்குகளை இன்றும் வைத்திருப் பதற்குக் காரணம், இந்த தொலைநோக்குப் பார்வைதான்.

வாங்கி சில வாரங்களிலோ, சில மாதங்களிலோ விற்று வெளி யேறும் முறையைத் தவிர்த்து, நீண்டகால அடிப்படையில் நிறுவனங்களில் பெரு முதலீடு செய்வதுதான் எல்ஐசியின் முக்கியமான யுக்தியாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள வாடிக்கை யாளர்களுக்குப் பணம் செலுத்தவோ அல்லது வேறு செலவுகளுக்காகவோ பங்குகளை விற்க வேண்டிய கட்டாயம் இருக்காது.

பணக் கையிருப்பு இருப்பதனால் அது சாத்திய மாகிறது. அதனால் அவர்களின் முதலீட்டை நீண்ட கால அடிப்படையில் செய்வதற்குச் சாத்தியம் உண்டாகிறது. மேலும், எல்ஐசி போன்ற நிறுவனங்களின் முதலீடு, செபி, ஐஆர்டிஏ போன்ற கட்டுப்பாட்டு அமைப்பு களால் நெறிமுறைப்படுத்தப் படுவதும் அவர்களின் முதலீட்டு வழிமுறைக்கு முக்கியக் காரணம்.

கணிசமான முதலீடு!

எல்ஐசி முதலீடு செய்யும் நிறுவனங்களில், கணிசமான அளவு பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கும். அப்படிச் செய்வ தால், எல்ஐசி அந்த நிறுவனங் களின் நிர்வாகத்தில் தலையீடு செய்யாவிட்டாலும், பெரு முதலீட்டாளர் என்ற சக்தி வாய்ந்த அந்தஸ்தைப் பெறும். இது அவர்களுடைய முதலீட்டுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் என்றே சொல்லலாம். எல்ஐசி குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளை வாங்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நிறுவனங் களின் சந்தை மதிப்பும் அந்த நிறுவனத்துக்குண்டான மரியாதையும் உயர்கிறது. வாரன் பஃபெட்டும் கோக் உள்பட பல நிறுவனங்களின் பங்குகளை இந்த வகையில் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

லாபப் பதிவு!

நீண்டகால முதலீட்டாளராக இருப்பினும் அவ்வப்போது லாபப் பதிவு (பிராஃபிட் புக்கிங்) செய்வதுதான் புத்திசாலித்தனம். அதுதான் ஒரு தேர்ந்த முதலீட்டா ளரின் அடையாளம். லாபப் பதிவு செய்யாமல் இருந்தால், என்ன லாபமாக இருந்தாலும் அது காகித லாபம்தான். அந்த வகையில், எல்ஐசி நிறுவனம் தனது முதலீட்டில் ஏற்படும் லாப இலக்கை அடைந்துவிட்டால் லாபப் பதிவு செய்வது என்பது வழிமுறை.

லாபப் பதிவு என்பது ஒரு நிறுவனப் பங்குகளை முழுவதுமாக விற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் இலக்கு என்னவோ அதற்கேற்ற வாறு ஒரு பகுதியை மட்டுமே விற்று லாபப் பதிவு செய்வது போதுமானது. இந்த வழிமுறையை எல்ஐசி மிகத் துல்லியமாகக் கடைப்பிடித்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.

பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் எடுக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டால் அது வெறும் காகித லாபமே. அவ்வப் போது நமது தேவைக்கேற்ப லாபப் பதிவு செய்து வந்தால் பங்குகளில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைச் சமாளித்து நல்ல வருமானம் ஈட்டலாம். அதே பங்கின் விலை இறங்கினால் நல்ல விலையில் மீண்டும் உள்ளே நுழையலாம் என்பது எல்ஐசி உணர்த்தும் யுக்தி.

இறக்கத்தில் முதலீடு!

பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி பெற உதவும் தாரக மந்திரம், இறக்கத்தில் வாங்கி; உச்சத்தில் விற்பதுதான். எல்ஐசி பின்பற்றும் மிக முக்கியமான பங்குச் சந்தை முதலீட்டு வழிமுறை இதுதான்.

கடந்த காலங்களில் பெரிய சரிவு எப்போதெல்லாம் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் எல்ஐசி பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது.

அந்தக் காரணத்தால்தான் சந்தை சரிவிலிருந்து மீண்டு உயரும் நிலையினை நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக, 2013 இறுதியில் இந்திய பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்தபோது எல்ஐசி யும் எஃப்ஐஐக்களும் பெரிய அளவில் முதலீடு செய்ததைப் பார்த்தோம்.எல்ஐசியின் இந்த அணுகு முறையால் தரமான நிறுவனப் பங்குகளை மலிவான விலையில் வாங்க முடிந்தது. பின்னர், சந்தை ஏறும்போது நல்ல விலையில் விற்று லாபம் பார்க்க முடிந்தது.

இறக்கத்தில் வாங்கி உச்சத்தில் விற்பதுதான் பங்குச் சந்தை முதலீட்டின் அடிப்படை விதி களில் முக்கியமானது. அதை எல்ஐசியின் முதலீட்டுக் கொள்கையும் நமக்கு உணர்த்துகிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் அதிக முதலீடு!

எல்ஐசியின் முதலீடுகள் கணிசமான அளவு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளன. அரசு கொண்டுவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை  திட்டங்களில் எல்ஐசியின் பங்களிப்பு அதிகமாக இருப்பதைக் காணலாம்.

பல பொதுத்துறை நிறுவனங் களின் பங்கு விற்பனையில் பிற முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாத நேரங்களில் எல்ஐசி அந்தப் பங்குகளில் முதலீடு செய்து வந்துள்ளது.

பிற நிறுவனங்களைப் போலல்லாது, பொதுத்துறை நிறுவனங்களில் எல்ஐசியின் முதலீடு என்பது முதலீடு என்ற விஷயத்தைத் தாண்டி, நாட்டின் பொருளாதாரத்துக்குச் செய்யும் சேவை என்ற கோணமும் வருகிறது.எல்ஐசியின் தற்போதைய முதலீட்டின் மொத்த மதிப்பில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 31 சதவிகிதமாக உள்ளது.

கடந்த காலங்களில் இந்தியப் பங்குச் சந்தை எப்போதெல்லாம் கடுமையான வீழ்ச்சியை அடைந்ததோ, அப்போதெல்லாம் எல்ஐசியின் முதலீடு பங்குச் சந்தைக்கு ஸ்திரத்தன்மை அளித்ததைப் பார்த்தோம்.

அதிலும் முக்கியமாக, எஃப்ஐஐக்கள் பங்குகளை விற்கும்போது இந்தியப் பங்குச் சந்தை ஆட்டம் கண்டுவிடும் நிகழ்வினை சமீபத்தில்கூடப் பார்த்தோம்.

அப்படிப்பட்ட சவாலான காலக்கட்டங்களில் பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்களிப்பு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்திருந்தது.

இனிவரும் காலங்களில் பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வெற்றி பெற நினைப்ப வர்கள் எல்ஐசியின் முதலீட்டு அணுகுமுறையை நன்கு புரிந்து கொண்டு, அதன் நடவடிக்கை களை உன்னிப்பாகக் கவனித் தாலே போதும்,  சந்தையின் போக்கு என்ன என்பதை அறிந்து, நஷ்டத்தைத் தவிர்த்து, லாபப் பாதைக்கு செல்ல முடியும்.

இனி வாரன் பஃபெட்டுடன் எல்ஐசியின் முதலீட்டு முறையை யும் ‘ஃபாலோ’ பண்ணுவோம்!

No comments:

Post a Comment