Powered By Blogger

Jan 19, 2017

மனநிம்மதி, மன நிறைவு

🎀🎀🎀🎀🎀🎀🎀
தினந்தோறும் பார்க்கும் எதார்த்தம்
கடவுள் வந்தார்...!
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படீ.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மனநிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
பத்தாவது மனிதனா..?

இல்லை
பத்தாது என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
🎀🎀🎀🎀🎀🎀🎀
*எண்ணும் எண்ணங்களுமே உங்களைத் தீர்மானிக்கும்...*💪

Jan 16, 2017

வாழ்வியல் நீதி!

எமதர்மராஜன் ஒரு குருவியை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த
கருடபகவான்,

உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.

அந்த பொந்தில் வசித்து வந்த
ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்த குருவியை விழுங்கிவிட்டது.

குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த
குருவிக்கே எமனாகி விட்டோமே என்று
கருடபகவான்,

குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"

நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,

அந்த குருவி சில நொடிகளில்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
வசித்த ஒரு பாம்பின் வாயால்
இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது;

அது எப்படி நிகழப் போகிறது?
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.

அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.

வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ
அது நிகழ்ந்தே தீரும்.
அதனால்
அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல்,
செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே
வாழ்வியல் நீதி!

Jan 12, 2017

அன்பாய் இருப்போம்.. பண்பாய் இருப்போம்..

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

⚁ "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .

⚂ "அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. 

⚄ "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

⚁ "ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

⚄ "வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

⚀ "ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

⚁ "அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?

⚁ "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

⚀ "இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

⚃ "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

⚄ "அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

⚂ " இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

⚀ " அதே வீடு தான் " ,

⚁ " அதே நெருப்பு தான் " ,

⚃ "ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

⚀ "" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.

⚃ "வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .

⚁ "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.

⚀ "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

⚃ "சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.

⚃ "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

⚀ "ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

⚀ "இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.

⚀ "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.

⚀ "மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

⚀ " இங்கு எதுவுமே மாறவில்லை " ,

⚀ " அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

⚀ " இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

⚀ " இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

⚀ " நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

⚀ "உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

⚀ " ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

⚂ "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை..

அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...!!

Jan 11, 2017

மத நல்லிணக்கம்

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் ,
அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்  .

அருகிலேயே அவளது கணவர் ...
  தூக்க முடியாமல்  ஒரு பெரிய மூட்டையை  தோளில் தூக்கி சுமந்தபடி ,  அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார் ..!
.
இவர்கள் இருவரைத்  தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லை .

காரணம் ... ஊரடங்கு உத்தரவு ..!
.
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன .
போக்குவரத்து அடியோடு  நிறுத்தப்பட்டு விட்டது.
வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் ,
விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள் !

காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இது ! ( 2016 ஜூன் )

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ,  ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார் . அதை தொடர்ந்து கலவரம் வெடித்தது .

இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள் .
உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு ..!
.
சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத்  தள்ள உத்தரவு !
ஆனாலும் அந்த கணவனும் மனைவியும் அந்த ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் .
.
தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: .“எங்கே போகிறீர்கள் ?”

அந்தப் பெண் பதில் சொன்னார் : “ஜவகர் நகருக்கு..?”

“ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?”

“இல்லை ..இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம்.. ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்”

“முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி .. இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? அது இருக்கட்டும் ... இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?”

அந்த கணவன் சொன்னார் : “தெரியும்..பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்..”

“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை . எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு ..”

“போய் விடுவோம்..” –கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள் .
.
இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார்  அந்த போலீஸ்காரர் :“ சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால்  கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு .. தெரியுமா ?”

“ தெரியும் ..”

“அது மட்டும் அல்ல ..இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள் . அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள் .”

அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : “அதுவும் தெரியும் .. ஆனாலும் நாங்கள் போய் விடுவோம் .. போய்த்தான் ஆக வேண்டும்..மிக மிக முக்கியமான வேலை ..”
.
அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார் . கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின்  தொடர்ந்தார் .
.
இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது . மீண்டும் மீண்டும் எச்சரித்தது .
.
அதையும் மீறி  அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த  சாலைகளில்  ....
பகல் முழுவதும் நடந்தார்கள் ; பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள் . ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள் .
.
எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன .
இந்த தம்பதிகள்   தேடி வந்தது பண்டிட்ஜி வீடு . அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது .
தெருவை   நெருங்கினார்கள் .
.
அதற்கு முன் ...ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது : “நில்லுங்கள்”

திரும்பிப் பார்த்தார்கள் .
காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது .

“உங்களை கைது செய்யப் போகிறோம் .”
“எதற்காக ..?”
“உங்கள் தோளில் இருக்கும்  பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை  வைத்திருக்கிறீர்கள் ? அதை கீழே இறக்குங்கள் .”
.
இறக்கினார்கள் .
போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள் . திகைத்துப்  போனார்கள் ..!

“எல்லாமே உணவுப் பொருட்கள் .. யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள்..?”
அந்தப் பெண் சொன்னார் : “இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு ..! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலே சொல்லி விடுகிறேன்.”
.
நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண் .

அதிகாலையிலேயே ஒரு  போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு !

பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி . இருவரும் நெருங்கிய தோழிகள் . ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள் .
அது சரி ... போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார்  ?
.
இதோ ..அந்த பரிதாப கதை : “ஹலோ ..இங்கே  ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன . வெளியில் செல்ல முடியவில்லை . வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை.. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை .. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது....

நான்கு  நாட்களாக  நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை . உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ...இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது... நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக ...”
.
பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம் .
.
இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும் , அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள் . “ நான்கு  நாட்களாக பட்டினியா ? எப்படி பண்டிட்டின் குடும்பத்துக்கு உதவுவது..?”
.
ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல் , உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்  .

வீட்டில் இருந்த கோதுமை , அரிசி , பருப்பு , காய்கறிகள் , மசாலா பொருட்கள் ... எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண் . பஸ் , ஆட்டோ எதுவும் இல்லாததால் , பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து ....
.
“இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார்  அந்தப் பெண்.

கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : “ ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள் .. அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு ! பாராட்டுகிறேன் அம்மா ... சரி ...உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?”

“அடுத்த தெருவில்தான் .. !”

“வாருங்கள் .. நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்...”
.
காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார் .
கதவு மெல்ல திறந்தது ; உள்ளே இருந்து வந்த பண்டிட்டும் , அவரது மனைவியும் , இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில்  “ அட கடவுளே ..இது என்ன ? எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள் ? முதலில் உள்ளே வாருங்கள் ..”
.
தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள் .

வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார் : “சரியம்மா ..முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள் . நான் வருகிறேன் .”

“நன்றி சார்..”

“பை தி பை .. நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ..?”
.
அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்..”
.
ஆம் .. இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்  ...
பசியால் துடித்துக் கொண்டிருந்த  பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு , 
பல  கிலோமீட்டர் தூரம்  நடந்து  கடந்து ,
தேடிச் சென்று உணவு கொடுத்தது
சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான் ..!
.
இது கதையல்ல .. “இந்தியா டுடே”யில் வந்த செய்தி !
.
இப்படிப்பட்ட மனித நேயம் , மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை ...
அந்த ஆண்டவனே வந்தால் கூட இந்தியாவில் மத பிரிவினையை உருவாக்க முடியாது !
.
வாழ்த்துக்கள்
எங்கள் இனிய சகோதரி
சுபைதா பேகம் அவர்களே  .. !
.

Jan 4, 2017

அப்பா

#தெய்வங்கள்எல்லாம் #தோற்றுபோகும்.....

அப்பா,,,
நான் நடக்கையில் என் கால்கள் வலிப்பதாய் நினைத்து என்னை உன் தோளில் சுமந்திருக்கிறாய்.

நான் செருப்பிட்டு பள்ளிக்கூடம் போக நீ செருப்பில்லாமல்
தேய்ந்திருக்கிறாய்.

எஞ்சிய வயதில் நான் பேருந்து நிலைய வெய்யிலில்
நிற்பதைக்கண்டு என்னக்காய்
நீ வாங்கி தந்த முதல் மிதி வண்டி
இன்னும் என் பங்களா வாசலில்
உன்னையே நினைவு படுத்துகிறது.

பள்ளி கூடம் போரப்பலேருந்து
கல்லூரி போரவர வீட்ட விட்டு
நா கடந்தா பார்த்து டா தங்கம்
ரோடு மேலே நடக்கறப்போ
பத்திரண்டா ராசா...

செலவுக்கு பணம் வெச்சிருக்கியா
கட சாப்பாடு கண்டபடி சாப்பிடாத
அண்ணாச்சி வீட்டுல சொல்லிருக்கேன் காசு கூட ஆனா பரவாயில்ல அங்கே போயி சாப்பிடு கண்ணா....

இதே வாக்கியங்கள் கண்மூடும்
ஒவ்வொரு கணமும்,என் கண்களில் கண்ணீர் தொப்பல்களாய்,,

நன்றாய் படித்து முடித்தேன்,
நல்ல உத்தியோகம்,
கை நிறைய சம்பளம்,
பை நிறைய துணிமணிகள்,
அன்னை இல்லாத வீட்டில்
நீ ஒருஅன்னை என நினைத்து ஸ்தம்பித்து,

பேருந்து நிலையம் வந்த என்னை
நீ ஏமாற்றி சென்ற செய்தி
என் காதில் ஏனோ,
இன்னொரு இருபது மயில் தூரம்
கடக்கவே இக்கணம் என்னில் முடியவில்லையே.

இனி என் வாழ்க்கையை
நான் எப்படி கடப்பேன்
என் தோள் பற்றி நடக்கும்
தோழனாய் நீ இதுவரை
இனி என் துணை ஏது?
நான் சாயும் உன் தோள் தான் ஏது?
எனக்காய் வருத்தம் கொள்ள
இனி ஒரு மனம் ஏது...?

என் வயது எத்தனை தள்ளி போயிருந்தாலும் நான் இன்னும் உன்னில் சிறு குழந்தைதானே
உலகம் தெரியாத என்னை
உலகமாய் இருந்து
பொற்றி பொற்றி பாதுகாத்தாய் அரவணைத்தாய்

தகப்பன் சாமி என்று
பலபேர் உன்னை சொல்ல
நான் கேட்டிருக்கிறேன்,
அந்தி சூழ்ந்த என் வாழ்க்கைக்கு
நீ இனியும் சாமியாய் தகப்பன் சாமியாய் என் நினைவுகளில்
தொடர்வாயா,,,,??

பக்குவபட்டுக்கொள் என்று
நீ சொன்ன பொழுதுகளில்
நான் பக்குவ பட்டிருந்தால்
உன்னை நினைக்க இந்த
சந்தர்பங்கள் கூட கிடைக்காமல்
போயிருக்கும் அல்லவா ...!

இன்று பக்குவப்படுகிறேன்
ஆம் தாயின் முகமறியாத நான்
இன்றும் நீ என்னோடிருப்பதாய் நினைத்து நான் பக்குவப் பட்டிருக்கிறேன் அப்பா,,,,

என்னை மகனே என்று அழைத்ததை தவிர
நான் வேறு ஒரு சந்தோஷங்களையும்
உன்னில் விதைக்க முடியாத பாவியானேனே,
என்னை மன்னிப்பீர்களா,,,??
எனக்கு துணை வருவீர்களா,,,??

நான் கடக்கும் கரடு முரடான பாதைகளில், புல்தரையாய்,
மழையிலும் வெய்யிலிலும்
ஒரு நிழல் குடையாய்,
என்னை தொடர்வீர் என்று
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
இன்று என்னோடு பேச
ஆளில்லாத இந்த தனிமையில்,,,

தந்தை தோழனே

உன்னை கொண்டு சென்ற
பாசக்கயிற்றின் விலை
நான் அன்றறிந்திருந்தால்

உம்மை எமனிடம்
ஒப்படைத்திருக்க மாட்டேன்.
அன்றவன் என்னை வென்றுவிட்டான்
விதியின் சதியால்..

என்னை நீ கண்ட பிறகுதான்
பெற்றெடுத்த மகராசியே கண்டிருப்பாள் இந்த அதிர்ஷ்டமில்லாதவனை,,

ஆதலால்தானோ என்னவோ
அவளும் என்னை விட்டு சென்றாள்.

உன்னிடம் எல்லாமே இருந்தும்
என் ஒரு மாத சோற்று படியில்
உன் ஒரு வேளை பசி தீர்க்க
ஓடோடி வந்த என்னில்

இடியாய் உன் மரண படுக்கை
நான் வாங்கி வந்த அரிசியும்
இன்று உன் வாய்க்கரிசி ஆனது.

உன் கந்தல் நிறைந்த உடுப்புகளை
என் கண்ணாடி பெட்டியில்
பத்திரபடுத்துகிறேன்.

உன் பிறப்பு முதல் இறப்பு வரையான சுய சரிதையை
என் நெஞ்சில் சுமந்து பாதுகாக்கிறேன் ஒரு சரித்திரமாய்.

ஆம்,,,

இன்று நீ இறந்து சென்றாலும்
என்னில் என்றும்
ஒரு சரித்திர நாயகனே

வாழ்க்கை

கதை பொறுமையாக படிக்கவும்🍏

ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் கையை பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

கையை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் கையை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா? 
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை ....