Powered By Blogger

Dec 15, 2016

*மருத்துவக் காப்பீடு* *பெறும்போது* *என்னென்ன விவரங்கள் தேவை?*

*எதிர்பாராத மருத்துவச் செலவுகளை சமாளிக்க, மருத்துவக் காப்பீடு ஒன்றுதான் தீர்வு. ஒரு நேரடி அனுபவத்தைக் கேளுங்களேன்...*

எனக்குத் தெரிந்த ஒருவர், அப்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக இருந்தார். நான் முன்பிருந்த காப்பீட்டு நிறுவனத்தில், அவர் ரூ.10 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு எடுத்து இருந்தார்.

காப்பீடு எடுத்த 46வது நாளில், அவர் மனைவியிடம் இருந்து இரவு 11 மணியளவில் எனக்கு ஃபோன் வந்தது. பதற்றத்துடன் பேசிய அவர், தன் கணவர் மாடியில் இருந்து திடீரென்று மயங்கிக் கீழே விழுந்து விட்டதாகவும், மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் சொன்னார்.

பரிசோதனையில் அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்கு ரூ.8.50 லட்சம் வரை செலவாகும் என்றும் சொன்னார். காப்பீட்டு நிறுவனத்தில் கிளெய்ம் கிடைக்குமா? கிடைக்காவிட்டாலும் தன் நகைகளையும், நிலத்தையும் விற்றாவது கணவரை காப்பாற்ற வேண்டும் என்றும் அந்தப் பெண்மணி சொன்னார்.

இந்த சிகிச்சைக்கு உறுதியாக கிளெய்ம் கிடைக்கும் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், கிளெய்ம் விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு முகவர் நிறுவனத்துக்கு (டிபிஏ) அனுப்பி வைத்தோம்.

அந்த நபரின் சிகிச்சைக்குத் தேவையான முழு கிளெய்ம் தொகையும் கிடைத்தது. சிகிச்சை நல்லபடியாக முடிந்து, இப்போது அவர் நலமுடன் உள்ளார்.

இங்கு நாம் முக்கியமான மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ஒன்று...மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்ட ஒருவருக்கு, முதல் 30 நாட்கள் வரை எந்த வித சிகிச்சைக்கும் கிளெய்ம் கிடையாது. இரண்டாவது, காப்பீடு எடுத்ததில் இருந்து முதல் 90 நாட்களுக்கு 12 வகையான 'கிரிட்டிகல் இல்னஸ்' பிரச்னைகளுக்கும் கிளெய்ம் கிடையாது. மூன்றாவது, குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு கிளெய்ம் கிடையாது.

இந்த மூன்று நிபந்தனைகளும், அனைத்து மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொதுவானது. அதேநேரம், மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்ட நிமிடம் முதல் விபத்து அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் கிளெய்ம் பெற முடியும்.

பாலிசிதாரர் ஒருவர், மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளும்போது அவருடைய உடல் எடை, உயரம், செய்யும் வேலை, பதவி, பிறந்த தேதி (சான்றிதழ் படி), சரியான முகவரி, பான் அட்டை எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மிகச்சரியாக விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

முக்கியமாக, பிறந்தது முதல் பாலிசி எடுத்துக்கொள்ளும் காலம் வரை அவர் ஏதேனும் சிகிச்சைகள் மேற்கொண்டு இருந்தால், அதையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

*பெண் பாலிசிதாரர்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் குறிப்பிட வேண்டும்.* பாலிசிக்கு முன்பு எடுத்துக்கொண்ட சிகிச்சை விவரங்கள் மறைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் கிளெய்ம் கிடைக்காது. பாலிசியும் ரத்து ஆகிவிடும்.

ஒருவர் குறிப்பிட்ட தொகைக்கு மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும், நடுவில் எப்போது வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு 'டாப் அப்' என்று பெயர். அதிகப்படுத்திய தொகைக்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. 'டாப் அப்' செய்வதற்கு முன்னால் ஏதேனும் சிகிச்சை பெற்றிருந்தால், அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் மீண்டும் கிளெய்ம் பெற இயலாது.

No comments:

Post a Comment