Powered By Blogger

Jul 25, 2016

இன்றையத் தமிழன்.

விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று
விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே முன் அனுமதி
வேண்டுகிறான்.

பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன் இன்று
புட்டியில் தண்ணீரை அடைத்து வீதியெங்கும்
விற்கிறான்.

வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.

அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக் கட்டியில் கோலம் போடுகிறான்.

கம்பங்கூழும் , கேப்பக்கஞ்சியும் குடித்து கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட உணவகங்களில் உண்டு வியாதியை விலைக்கு வாங்குகிறான்.

வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு பந்தி முறையில் உணவளித்து வீட்டு விழாக்களை கொண்டாடியவன் இன்றுக் கையில் பாத்திரத்தை
ஏந்திக் கொண்டு உண்கிறான்.

இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளிவிட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல் ஓடுகிறான்.

கட்டியவளை தொடவே அனுமதி எதிர்பார்த்தவன் இன்று காமத்திற்கும் காதலுக்கும் வேறுபாடு புரியாமல் தவிக்கிறான்.

தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன் இன்று
அயல் மொழியை எல்லாம் மொழி அல்ல அறிவு என்கிறான்.

ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்.

# எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற வரலாறே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் இன்றையத் தமிழன்.

No comments:

Post a Comment