Powered By Blogger

Feb 20, 2012

விரும்பியதை அடைய ஒரே வழி


AN

சமுத்திரத்துக்கே சென்றாலும் கொண்டு போன பாத்திரத்தின் அளவைப் பொறுத்தே ஒருவன் தண்ணீரை எடுத்து வர முடியும். தம்ளரை எடுத்துச் சென்றவன் குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருபவனைப் பார்த்து பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. ‘அவனுக்கு அதிகம் தண்ணீரைத் தந்திருக்கிறாயே’ என்று சமுத்திரத்திடம் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை. எத்தனை வேண்டுமானாலும் தர சமுத்திரம் தயாராகத் தான் இருக்கிறது. யார் எடுத்தும் அதில் தண்ணீர் குறையப் போவதில்லை. அதிகம் வேண்டுபவர் பெரிய பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்து வரும் தண்ணீரைச் சுமக்கும் திராணியும் இருக்க வேண்டும். அது தான் தேவை.
கடவுள் அல்லது பிரபஞ்சம் அந்த சமுத்திரத்தைப் போல என்று சொல்லலாம். மனிதர்களின் அருகதையை அந்தப் பாத்திரமாகச் சொல்லலாம். எந்த அளவு ஒருவன் தன் தகுதியையும், அருகதையையும் வளர்த்துக் கொள்கிறானோ அந்த அளவுக்குத் தகுந்தாற் போல எல்லாவற்றையும் உலகில் பெறுகிறான். தான் பெறுவது குறைவு என்று நினைப்பவன் தன் அருகதையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
பாத்திரம் பெரிதாக இருந்தாலும் ஒருவன் அந்த சமுத்திரத்திடம் போக வேண்டும், தண்ணீரைப் பாத்திரத்தில் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதை சுமந்து கொண்டு வரத்தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பாத்திரமும் ஒருவனுக்குப் பயன்படும். இல்லாவிட்டால் பெரிய பாத்திரமும் கூட காலியாகவே இருக்கும். இத்தனையும் செய்ய முடிந்தவன் வைத்திருப்பது சிறிய பாத்திரமானாலும் அதில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வருவது சாத்தியமே. எனவே தான் அருகதை இருந்தும் முயற்சி இன்மையால் சிலர் வெற்றுப் பாத்திரமாகவே இருப்பதை நாம் காண முடிகிறது. அதே போல அந்த அளவு அருகதை இல்லாதவனும் தன் முயற்சியால் அதற்கேற்றாற் போல சிறப்பாக வாழ்வதையும் காண முடிகிறது.
பாத்திரமும் பெரிதாக இருக்கிறது. சென்று தண்ணீர் எடுக்கும் முயற்சியும் நடக்கிறது. ஆனால் பாத்திரத்தில் ஓட்டை இருக்கிறது என்றாலும் எடுத்த தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் அவலநிலையும் ஏற்படும். சிலர் தங்களிடம் ஏகப்பட்ட திறமையை வைத்துக் கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் போக்கடிக்கிறாற் போல ஒருசில பலவீனங்களை வைத்திருந்தாலும் பெற்றதை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே திறமையையும், திறமையை வீணடிக்கும் பலவீனத்தையும் ஒருசேரப் பெற்றிருந்தாலும் ஒருவன் வெற்றுப் பாத்திரமாக மாறும் நிலை ஏற்படலாம்.
ஆகவே மனிதர்களே, நீங்கள் எதை அடைய விரும்பினாலும் அதற்கேற்ற அருகதையை வளர்த்துக் கொள்ளுங்கள். அருகதை பெற்ற பின் விரும்பியதை அடையத் தேவையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு எதிரான பலவீனம் உங்களிடம் ஏதாவது இருக்குமானால் முதலில் அதைப் போக்கிக் கொள்ளுங்கள். எதை விரும்பினாலும் நீங்கள் அதை அடைவது உறுதி. அடைந்ததை தக்க வைத்துக் கொள்வதும் உறுதி.
மற்றவர் பெறுவதால் நமக்குக் கிடைப்பது குறைந்து விடும் என்ற பயமும் வேண்டாம். எத்தனை பேர் எத்தனை தண்ணீர் எடுத்தாலும் சமுத்திரம் குறையப் போவதில்லை. எல்லோருக்கும் எத்தனையும் தர குறைவில்லாத சமுத்திரம் தயார். பாத்திரங்களுடன் நீங்கள் தயாரா?

No comments:

Post a Comment